Search This Blog

Friday, January 14, 2011

பிரபஞ்ச இருப்பின் விசித்திரம் - Latha

பிரபஞ்ச இருப்பின் விசித்திரம்

ராஜா மகள்

அடர்ந்து வளர்ந்த காட்டு வழியேகினேன்
“தொடர்ந்து வா” என்று கட்டளை பிறந்தது.

அஞ்சி நடுங்காத பேதையென்னுடன்
கெஞ்சியே வந்தானொரு நோஞ்சான் காளை

திரும்பிடு என்றேன் - நீயும்
வந்திடு என்றான்
என்கடன் இதுவென எத்தனை இயம்பியும்
தன்கடன் அதனைத் தடுப்பது என்றான்

அதற்குன்னை யார் பணித்தார்?
எதற்கிங்கு வருகின்றாய்?
உனக்கென்ன உறவு நான்?

விசுக்கென்று திரும்பி அடுத்த
வினா தொடுப்பதற்குள்
காணாமல் போயிருந்தானந்த
மாயக் கண்ணன்!

தொல்லையொழிந்ததென
துள்ளி நடந்தேன் - காட்டுக்
கள்ளியின் முள்ளொன்று
கையைத் தைக்கையில்
கூட வந்தவனையே
கூவி அழைத்தேன்.

அவனில்லை!
வேறு அரவமுமில்லை!!

குருதி சிந்த நான் நடந்த கொடுமையை
நீங்கள் புரியும்படி விளக்கத் தெரியவில்லை

காட்டுப் பூக்களில் இரண்டினைப் பறித்தென்
காயத்தின் மீது சாறு பிழிந்தேன்
அமிலம் பட்டதாய் எரிச்சல் கண்டது – பின்
அடங்கிப்போயெனைத் தரையில் சாய்த்தது

எத்தனை நிமிடங்கள் இப்படிக் கிடந்தேனோ…
விழித்தபோதென் அருகிருந்து கண்ணன்
அகன்று மறைந்தான்

என் கையிலப்போ வலியுமில்லை
கள்ளி தைத்த முள்ளுமில்லை

எப்படியானது இப்படியென்றும்
என்னவானது எனக்கென்றும்
எழுந்த கேள்விகள்
“அவன் நிஜமா?”
அன்றி
“நான் நிஜமா?”
என்றென்னையே குடைய
விடையறியா துயரோடென்
இலக்கு நோக்கி கால்கள் நடந்தன

“அங்கேயே நில்” என்றிரண்டாவது
கட்டளையென் செவியில் அறைந்தது

ஓ! அண்மித்து விட்டேனோ…?
அடுத்தது என்னவென்றென் மனதில்
அவனுக்காய் போட்ட படம்
அவனெனை நெருங்குவதற்குள்
நிறைவேற வேண்டுமே!

என்னைக் காக்கவென
நான் எடுத்துவந்த ஆயுதம்
வெறுமிரண்டு ரூபா தான்!

ஆனால் அது எடுத்திடப்போவதை
என்னவிலை கொடுத்தும் அவன்
இனிமேல் பெறமாட்டான்

ஏன், என்னினப் பெண்களுக்கு
இனியிவனே காவல்தெய்வம்

அவனது மூன்றாவது ஆணையில்
மூர்க்கம் தெரியவில்லை
உன் நடையும் இடையும் அழகென்று
சிங்களமுரைத்தான்!

குரல் வந்த திசையில் பாய்ந்தவென் விழிகள்
மரத்திலிருந்த அம் மந்தியைக் கண்டது

இலையின் நிறத்தில் சீருடை தரித்து
புலி வருமென்றவன் காவல் இருந்தான்

அவனுக்கு இரையாக
இன்றெனது முறையாம்!

இப்போதெனக்கு வேகமாக …
மிக வேகமாக… வாங்குகிறது மூச்சு!

சிங்கத்தை வெல்லப்போன குட்டி முயலுக்கும்
இப்படித்தான் இருந்திருக்குமோ...?

அதோ…
என்னை முந்திக்கொண்டு அவனிடம்
வேறெவரோ போகிறாரே…
யா…ர…து…?

ஆனால் மந்திக்கு…
என்னைத் தவிர வேறெதுவுமே தெரியவில்லை

மரண பயமேதுமின்றி
மந்தியிருந்த மரத்தை
அண்மித்துவிட்டேன் நான்!

மரத்திலிருந்து இறங்கியது மந்தி
என் கண்கள் மங்கியது
மயங்கிச் சரிவதை நன்கே உணர்ந்தேன்
சொருகிச் செல்லும் கண்களை
மூடவிடாத
என் பிரயத்தனம் பலிக்கவில்லை

முழு மயக்கம் அடைவதற்குள்
இன்றேயென் இறுதியென
அழுததென் மனது!

எண்ணிச் சில நிமிடங்களுக்குள்
இருள் கவிந்து பின்
விடிந்தது எனக்குள்
இறந்து பிறந்ததாய் ஏதோவோர் உணர்வு
மரத்தைப் பார்த்தேன்
அதன் கீழே விழுந்து கிடந்தது மந்தி
அது குருதி வெள்ளத்தில் குளித்துக் கிடந்தது

அதனருகில் ஏதோவொன்று…
சிறிதாய்… மிகச் சிறிதாய்…
அருகில் சென்றேன்
அது… அது…
அதன் ஆண்குறி!
அருகில்…
நான் கொண்டுவந்திருந்த
இரண்டு ரூபா பிளேட்!

நான் மட்டுமின்றியென் இனமும்
இனிமேல் மோட்சம் பெறுமென்ற
நம்பிக்கை ஒளியொன்று
என்னுள்ளொளியாய் மின்னியது

வந்த வழியேகினேன்
எனக்கு முன்னால் நடந்தது
பூனைபோலொரு குட்டி மிருகம்
ஆனால் அது பூனையில்லை!
ஊரின் எல்லைவரை
அது என்கூடவே வந்தது!

No comments:

Post a Comment